1995-ல் வெளியான 'ஜுமாஞ்சி', வசூலில் சக்கபோடு போட்ட இந்த ஹாலிவுட்திரைப்படத்தின் 'ஸ்பிரிட்சுவல் சீக்குவ'லாக 'ஜதூரா : எ ஸ்பேஸ் அட்வெஞ்சர்' திரைப்படம் 2005-ல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் நேரடியான இரண்டாம் பாகமாக, 'ஜுமாஞ்சி 2 : வெல்கம் டூ தி ஜங்கிள்' வெளியாகியிருக்கிறது. இருபது ஆண்டுகளைக் கடந்தும், 'ஜூமாஞ்சி'க்கு வரவேற்பு இருக்கிறதா?
நான்கு டீன்ஏஜ் இளசுகள், 'வீடியோ கேம்' மூலமாக, வில்லன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜுமாஞ்சி உலகிற்குச் சென்றுவிடுகிறார்கள். அதிலிருந்து மீள, கடைசிவரை விளையாட வேண்டும். தவிர, இவர்கள்தாம் அந்த உலகை கெட்டவன் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும், விளைவுகளும்தாம், 'ஜுமாஞ்சி-2' திரைப்படத்தின் கதை.
பிரான்ஃபோர்ட் பள்ளியில் படிக்கும் ஸ்பென்ஸர், ஃப்ரிட்ஜ், பெத்தனி, மார்த்தா... நான்கு பேர் செய்த சேட்டைத்தனத்திற்காக `டிடென்ஷன்' எனும் முறையில், பள்ளியில் இருக்கும் பழைய அறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று தண்டிக்கப்படுகிறார்கள். பாழடைந்த அந்த அறையில் இருக்கும் ஜுமாஞ்சி வீடியோ கேமை இவர்கள் விளையாடிப் பார்க்க, ஆளுக்கொரு கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். பிறகென்ன? நால்வரும் 'ஜுமாஞ்சி' என்ற மாய உலகிற்குள் விழுகிறார்கள். வில்லனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜூமாஞ்சி உலகில், 'ஜாகுவாரின் கண்' என்றழைக்கப்படும் விலை உயர்ந்த 'கல்' திருடுபோய்விடுகிறது. அதன் கட்டுப்பாட்டில்தான் ஒட்டுமொத்த ஜுமாஞ்சி உலகமும் இயங்கும்.
இந்தக் கல்லைக் கொண்டு, ஜுமாஞ்சியைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க நினைத்த வில்லன், வேன் பெல்ட்டிடம் (பாபி கானெவல்) இருந்து, வேன் பெல்ட்டை எதிர்த்த அவரது நண்பர் நிகெல் (ரைஸ் டார்பி) கல்லை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். கதைப்படி, அந்தக் கல்லைக் காப்பாற்றி, உரிய இடத்தில் வைக்க நான்கு பேர் இடம்பெற்றிருப்பார்கள். 'ஜுமாஞ்சி' கேமை விளையாடிய நான்கு டீன்ஏஜ் இளசுகளும், 'ஜுமாஞ்சி' உலகில் கல்லைக் காப்பாற்றும் ஹீரோக்களாக மாறிவிடுகிறார்கள். 'அங்கிருந்து வெளியேற வேண்டும்; ஜுமாஞ்சியைக் காப்பாற்ற வேண்டும்' என்ற இவர்களின் இலக்கிற்கு, கிடைக்கும் சில துப்புகளை வைத்துக்கொண்டு அபகரிக்கப்பட்ட கல்லை மீட்டு, உரிய இடத்தில் வைத்தார்களா இல்லையா, வில்லனின் பிடியிலிருந்து ஜுமாஞ்சி விடுதலை பெற்றதா இல்லையா, வீடியோ கேம் விளையாடிய நால்வரும் மீண்டும் நிஜ உலகிற்குத் திரும்பினார்களா இல்லை... இதுதான் 'ஜுமாஞ்சி-2' திரைப்படத்தின் பிளேயிங் ஏரியா.
ஸ்பென்ஸர், டாக்டர் பிரேவ் ஸ்டோனாகவும் (டிவெயின் ஜான்ஸன்), ஃப்ரிட்ஜ், மவுஸாகவும் (கெவின் ஹார்ட்), பெத்தனி, பேராசிரியர் ஷெல்டனாகவும் (ஜாக் ப்ளாக்), மார்த்தா, ரூபி ரவுண்ஹவுஸாகவும் (கேரன் கில்லன்) மாறிவிடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் 'மூன்று உயிர்' என வீடியோ கேமுக்குத் தகுந்தமாதிரி, சில திறமைகளோடு அவர்களது கேரக்டர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. திறைமைக்குக் கொஞ்சமும் குறைவில்லாததுபோல, கதைக்குத் தகுந்த நடிப்பையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள், அனைவரும்.
படத்தின் மிகப்பெரிய பலம், காமெடி. டிவெயின் ஜான்ஸன் - கெவின் ஹார்ட் காம்போவின் கெமிஸ்ட்ரி, ஏற்கெனவே இருவரும் இணைந்திருந்த `சென்ட்ரல் இன்டலிஜன்ஸ்' படத்தில் எந்தளவு வொர்க்அவுட் செய்தார்களோ... கொஞ்சமும் தவறாமல், இந்தப் படத்திலும் காமெடியில் அசத்துகிறார்கள். ஜாக் பிளாக்கின் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டலாம். ஏனெனில், நிஜ உலகில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பொழுதைக் கழிக்கும் குறும்புப் பெண் 'பெத்தனி'யாக வருபவர், ஜுமாஞ்சியில் 'பேராசிரியர் ஷெல்டன்' எனும் ஆண் கேரக்டராக மாறுகிறார். பெண்களுக்கே உரிய மேனரிஸத்தை எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல், ரகளையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டுகிறார், ஜாக் பிளாக். படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், கிராஃபிக்ஸ். தியேட்டரில் இருக்கும் இரண்டு மணிநேரமும் காட்டுக்குள்ளேயே திரிந்த மனநிலையைக் கொடுத்த விஷூவல் எஃபெக்ட்ஸ் வேற லெவல்!
ஆனால், வில்லன் வேன் பெல்ட்டின் கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருந்திருக்கலாம். ஜுமாஞ்சி உலகில் அனைவரையும் தெரித்து ஓடவிடும் வில்லனாக அவரைப் பற்றி எடுத்துச்சொல்கிறார்கள். ஆனால், அவருடைய வில்லத்தனம் அந்தளவுக்குப் பிரமிப்பையோ, பயத்தையோ கொடுக்கவில்லை. தவிர, சில இடங்களில் 'தீவிரமான சண்டைக் காட்சிகள் இருக்கும்' என எண்ணும் ரசிகர்களுக்கு, லோ வோல்டேஜ் சண்டைக் காட்சிகளையே கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஜாக் கஸ்டன். டிவெயின் ஜான்ஸனாக நடித்திருக்கும் 'ராக்'கின் பிளஸ் பாயின்ட்டே, அவருடைய கட்டுடல் அமைப்புதான். அதுவும், ஆம்ஸை முறுக்கிப் பார்க்க மட்டுமே உதவியிருக்கிறது.
'ஜுமாஞ்சி'யின் முதல் பாகத்தில் அட்ராசிட்டிகள் அனைத்தும் ஊருக்கும் நடக்கும். பெயரளவில் இரண்டாம் பாகமாக உருவான 'ஜதூரா'வின் சேட்டைகள் வான்வெளியில் நிகழும். 'ஜுமாஞ்சி'யின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இப்படம் காட்டுக்குள் நடக்கிறது. முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் குறைவுதான் என்றாலும், சில இடங்களில் ஒலிக்கும் டபுள் மீனிங் காமெடிகளுக்கு மட்டும் காதைப் பொத்திக்கொண்டு, இந்தக் காட்டிற்குள் குழந்தைகளோடு ஒரு ட்ரிப் அடித்துவிட்டு வரலாம். 'ஜுமாஞ்சி : வெல்கம் டூ தி ஜங்கிள்' உங்களை அன்புடன் வரவேற்கும்.
0 comments:
Post a Comment